செய்திகள்
கொரோனா வைரஸ்

மூன்றாம் உலகப் போருக்காக சீனா தயாரித்த உயிரி ஆயுதமா கொரோனா வைரஸ்?

Published On 2021-05-10 01:25 GMT   |   Update On 2021-05-10 01:25 GMT
கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன ராணுவம் திட்டமிட்ட ரகசிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

சீனாவின் வுகான் நகரில் கண்டெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவியது. அதன் தாக்கம் தற்போதும் குறையவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை தற்போது வேகமாக உள்ளது.

சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும், இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது.

இந்நிலையில், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான சீன ராணுவத்தின் ரகசிய ஆவணங்கள், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு கிடைத்துள்ளதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:



கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு 5 ஆண்டுக்கு முன் 2015-ம் ஆண்டில் சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இணைந்து சார்ஸ் கொரோனா என்ற வைரசை உருவாக்கும் திட்டத்தை தயாரித்தனர். தேவைப்படும்போது இந்த வைரசை உயிரி ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டனர். போர்க்காலத்தில் மட்டுமின்றி, தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் பயன்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டது.

வைரஸ் இயற்கையாக உருவானதாக தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும், குற்றம் சாட்டினால் மறுக்கும் அளவுக்கு இயற்கையாகவும் இருக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவுக்கு கிடைத்த இந்த ரகசிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News