செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

பக்ரைனில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்

Published On 2020-12-12 03:20 GMT   |   Update On 2020-12-12 03:20 GMT
பக்ரைனில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
துபாய்:

கொரோனா என்ற ஒற்றை வார்த்தைதான் கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி வைரசின் பெயர்தான் இது.

இந்த வைரஸ் உலகம் முழுவதும் 7 கோடிக்கும் அதிகமானோரை தாக்கியுள்ளது. மேலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. அமெரிக்கா போன்ற வலுவான சுகாதார கட்டமைப்பு கொண்ட நாடுகளும் கூட கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.

இதனிடையே இந்த கொடிய வைரசை ஒழிப்பதற்கு தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்த உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கின. இந்த முயற்சி தற்போது பயனளிக்க தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் பயனளிக்கக்கூடியது என்று கடந்த மாதம் 18-ந் தேதி பைசர் நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்த தடுப்பூசியை அமெரிக்கா மற்றும் உலகின் பிற நாடுகளில் அவசர தேவைக்கு பயன்படுத்த பைசர் நிறுவனம் ஒப்புதல் கோரியது.

இதில் உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்து பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு கடந்த 2-ந் தேதி ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதி முதல் அங்கு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

இங்கிலாந்தை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பக்ரைன் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது.

15 லட்சம் மக்கள் தொகை கொண்ட பக்ரைனில், மற்ற வளைகுடா நாடுகளுடன் ஒப்பிடுகையில் வைரஸ் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது.

இருப்பினும் கொரோனா தடுப்பூசியை விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அந்த நாடு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு முன்பாக ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த பக்ரைன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில் பக்ரைனில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பக்ரைனின் அரசு செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், பிற நாடுகளில் இருந்து வந்து இங்கு வசிப்பவர்களுக்கும் ஒரு பாதுகாப்பான தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மக்களுக்கு எந்த தடுப்பூசி போடப்படும் என்பது அந்த செய்தியில் குறிப்பிடப்படவில்லை. மேலும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 27 மருத்துவ மையங்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இங்கிலாந்து மற்றும் பக்ரைனை தொடர்ந்து பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த சவுதி அரேபியா தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நவம்பர் 24-ந் தேதி பைசர் நிறுவனம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கு சவுதி அரேபியா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை இறக்குமதி செய்து பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News