செய்திகள்
கோப்புப்படம்

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு

Published On 2020-12-02 19:00 GMT   |   Update On 2020-12-02 19:00 GMT
ஜெர்மனியில் சாலையில் அதிவேகமாக வந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த விபத்துக்குள்ளானதில் பிறந்து 9 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெர்லின்:

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்குள்ள சிமியோன்ஸ்டிராஸ் என்ற வீதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இதனால் எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இந்த நிலையில் நேற்று மதியம் சிமியோன்ஸ்டிராஸ் வீதி வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மக்கள் சாலையின் ஓரமாக கூட்டம் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று திடீரென மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் பலர் கார் மோதி தூக்கி வீசப்பட்டனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் அலறி துடித்து அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு வழியில் நின்றவர்களையெல்லாம் இடித்து தள்ளிவிட்டு சென்றது.

இந்த கோர சம்பவத்தில் பிறந்து 9 வாரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மற்றும் 73 வயதான மூதாட்டி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தங்களது வாகனங்களில் விரட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய காரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த கார் டிரைவரை கைது செய்தனர். 51 வயதான இந்த நபர் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News