பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்காள தேச அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
வங்காளதேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை
பதிவு: அக்டோபர் 13, 2020 18:23
மரண தண்டனை
டாக்கா:
உலகின் பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன. இந்த சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு சரியான தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு எல்லாம் முடிவு வரும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்காளதேச அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வங்காளதேச சட்டத்துறை மந்திரி அனிசுல் ஹக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் விரைவாக திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிப்பதற்கு இந்த சட்ட முன்மொழிவு வழிவகுக்கிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்துக்கு வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீத் ஒப்புதல் அளிப்பார் என தெரிவித்தார்.
வங்காளதேசத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பாலியல் தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :