செய்திகள்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

கொரோனாவை மீண்டும் தோற்கடித்துவிட்டோம் - நியூசிலாந்து அரசு அறிவிப்பு

Published On 2020-10-05 23:20 GMT   |   Update On 2020-10-05 23:20 GMT
ஆக்லாந்தில் 12 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பரவாத நிலையில் வைரசை மீண்டும் தோற்கடித்து விட்டோம் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
ஆக்லாந்து:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதில் வெற்றியடைந்த நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது. அந்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக அந்நாட்டில் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. 

அந்நாட்டில் 102 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் கொரோனா பரவாமல் இருந்தது. இதனால், ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி அந்நாட்டின் தலைநகர் ஆக்லாந்தில் மீண்டும் 4 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், 15 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட ஆக்லாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

மேலும், கொரோனாவின் முதல் அலை வெற்றிகரமாக தடுக்கப்பட்டது போலவே இரண்டாவது அலையையும் கட்டுப்படுத்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான நியூசிலாந்து அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டது.

அதன் விளைவாக கடந்த 12 நாட்களில் ஆக்லாந்து நகரில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. 50 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட நியூசிலாந்தில் இதுவரை 1,855 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 1790 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தமாக 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் அந்நாட்டில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்நிலையில், கடந்த 12 நாட்களில் ஆக்லாந்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாததையடுத்து, அந்நகரில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜெசிந்தா,’ இது ஏற்கனவே மிகவும் நீண்ட ஆண்டாக உணரும் வகையில் இருந்து மிகநீண்ட காலத்திற்கு இழுத்து செல்வது போன்று உணர்வு ஏற்படுகிறது. 

எது எப்படியாயினும், நியூசிலாந்து மற்றும் ஆக்லாந்து மக்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தியுள்ளனர். அந்த திட்டம் இரண்டு முறை சிறப்பாக செயல்பட்டு கொரோனா வைரசை மீண்டும் தோற்கடித்துள்ளது’ என்றார்.
Tags:    

Similar News