செய்திகள்
மோடி-மகிந்த ராஜபக்சே (கோப்பு படம்.)

காணொலி காட்சி மூலம் மோடி-மகிந்த ராஜபக்சே இன்று பேச்சுவார்த்தை

Published On 2020-09-26 07:27 GMT   |   Update On 2020-09-26 07:27 GMT
காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் ராஜபக்சே இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

கொழும்பு:

இலங்கையில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்சே குடும்பத்தின் பொதுஜன பெரமுனா கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.

மகிந்த ராஜபக்சே 4-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இடையிலான இரு நாட்டு உச்சி மாநாடு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இரு தலைவர்களும் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் இரு தரப்பு உறவுகளை விரிவாக ஆய்வு செய்வார்கள் என்றும் இலங்கையில் இந்தியா செய்துவரும் ஏராளமான உள் கட்டமைப்பு திட்டங்கள் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இன்று மோடி- மகிந்த ராஜபக்சே இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் மீனவர்களின் பிரச்சினை முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ராஜபக்சேவின் மீடியா அலுவலகம் தரப்பில் கூறும்போது, மகிந்த ராஜபக்சே நேற்று உள்ளூர் மீனவ அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து இந்தியா- இலங்கை இடையிலான பிரதமர்கள் பேச்சுவார்த்தையில் மீனவர்கள் பிரச்சினை முக்கிய பங்கு வகிக்கும்.

பிரதமருடனான சந்திப்பில் உள்ளூர் மீனவ சமுதாயத்தினர் தெரிவித்த போது, கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் நுழைந்து மீன் பிடிப்பதை இந்திய அதிகாரிகள் தடுக்கவில்லை என்றும் இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிரமரிடம் தெரிவித்து தீர்வு காணப்படும் என்று பிரதமர் ராஜபக்சே உறுதியளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியை டெல்லியில் மகிந்த ராஜபக்சே சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர்கள் 2 முறை தொலைபேசியில் பேசி உள்ளனர். அதன்பிறகு தற்போது இரு நாட்டு தலைவர்களும் முதல் முறையாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Tags:    

Similar News