search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜபக்சே"

    • இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது.
    • பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம்.

    கொழும்பு:

    அண்டை நாடான இலங்கை, சுதந்திரத்துக்குப் பின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை கடந்த ஆண்டு சந்தித்தது. அன்னியச் செலாவணி இருப்பு முற்றிலுமாக காலியான நிலையில், விலைவாசி விண்ணைத் தாண்டிச் சென்றது. உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொறுமை இழந்து கொந்தளித்த பொதுமக்கள், தெருவில் இறங்கிப் போராடினர். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் அதிபர் பதவியில் இருந்து கீழிறங்கிய கோத்தபய ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

    பின்னர் அவர் நாடு திரும்பிவிட்டார். இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது. ஆனால் 46.9 பில்லியன் டாலர்கள் என்ற மிகப் பெரிய கடன் மலையில் இலங்கை உட்கார்ந்திருக்கிறது. அதில் சுமார் பாதி அளவு, சீனாவுக்கு கொடுக்க வேண்டிய கடன் ஆகும்.

    இந்த நிலையில், இலங்கை சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் (டிரான்பரன்சி இன்டர்நேசனல்) மற்றும் 4 செயல்பாட்டாளர்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. அதில் 4 நீதிபதிகள், இலங்கையில் 2019-2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஆகிய ராஜபக்சே சகோதரர்கள், பொருளாதாரத்தை தவறாக கையாண்டதே காரணம் என்று அதிரடியாக தீர்ப்பு கூறினர். மேலும், இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர்கள் அஜித் நிவார்டு கப்ரால், லக்ஷ்மண், கருவூலத்துறை முன்னாள் செயலாளர்கள் ஜெயசுந்தரா, அட்டிகலே உள்ளிட்ட உயர்பொறுப்பு வகித்த 13 பேரும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கில் ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட்டு அபராதம் எதையும் விதிக்கவில்லை என்றாலும், மனுதாரர்களின் வழக்குச் செலவுக்கு தலா ரூ.1½ லட்சம் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து, பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம் என்று கூறப்படுகிறது.

    ×