செய்திகள்
கோப்புப்படம்

சீனாவின் சோதனை வெற்றி - விண்வெளிக்கு அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

Published On 2020-09-06 20:38 GMT   |   Update On 2020-09-06 20:38 GMT
விண்வெளிக்கு அனுப்பிய சீனாவின் விண்கலம் 2 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
பீஜிங்:

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. இதற்குப் போட்டியாக, சீனாவும் விண்ணில் ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சீனா பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மறு பயன்பாட்டுக்குரிய விண்கலத்தை சீனா உருவாக்கியுள்ளது.

அந்த வகையில் விண்ணுக்குச் செல்லும் விண்கலம் தனது பணிகளை முடித்துவிட்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விண்கலத்தை பரிசோதிக்கும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை ஜியுகுவான் நகரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2 எப் ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்தது.

இந்தநிலையில் 2 நாட்களுக்கு பிறகு சீனாவின் விண்கலம் நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இதனை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் விண்கலம் எங்கு எப்போது தரையிறங்கியது என்கிற கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேசமயம் இந்த வெற்றி சீனாவின் விண்வெளி திட்டத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News