செய்திகள்
தலாய் லாமா

தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா நன்றி

Published On 2020-07-08 03:46 GMT   |   Update On 2020-07-08 03:46 GMT
1959-ம் ஆண்டு முதல் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் தந்து அவரையும் ஒட்டுமொத்த திபெத்தியர்களின் புனிதத்தையும் காத்துவரும் இந்தியாவுக்கு நன்றி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வா‌ஷிங்டன் :

திபெத்தைச் சேர்ந்த புத்த மதத்தினரின் தலைவர் தலாய் லாமா எனப்படுகிறார். திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை எதிர்த்து கடந்த 1959-ல் அங்கு புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சியை சீனா இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதனால் தற்போதைய தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் அப்போது முதல் இமாசலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் தலாய்லாமா நேற்று முன்தினம் தனது 85 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா, 1959-ம் ஆண்டு முதல் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்து வருவற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறையின் இயக்குனரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "தனது அமைதி மற்றும் கருணையின் மூலம் உலகை ஊக்கப்படுத்திய தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 1959-ம் ஆண்டு முதல் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் தந்து அவரையும் ஒட்டுமொத்த திபெத்தியர்களின் புனிதத்தையும் காத்துவரும் இந்தியாவுக்கு நன்றி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News