செய்திகள்
எச்1 பி விசா

எச்1 பி விசாக்களை நிறுத்தி வைக்க அமெரிக்கா பரிசீலனை

Published On 2020-06-12 13:38 GMT   |   Update On 2020-06-12 13:38 GMT
பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி எச்1 பி, எல் 1, ஜே 1 விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
வாஷிங்டன்:

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த ‘எச்1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.

இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். அதே போல் ‘எச்1 பி’ விசா மூலம் நீண்டகாலம் அங்கு பணியாற்றும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ‘எச்1 பி’ விசாவை நீட்டிக்கவும், கிரீன் கார்டு பெறுவதற்கும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிகின்றன. இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை, விண்ணப்பதாரர்கள் பல்வேறு வகையிலான சான்றிதழ்களை சமர்ப்பிக்க கோருவது வழக்கம்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இதனால் குடியேற்ற உரிமை இல்லாத வெளிநாட்டவர்கள்  அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 60 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை வரும் 22ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்கான ‘எச்1 பி’ விசாக்கள் வழங்குவதை அக்டோபர் 1 முதல் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பது பற்றி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. அது மட்டுமல்லாமல்’ எல் 1, ஜே 1 ’விசாக்களையும் நிறுத்தி வைக்கப் பரிசீலித்து வருகிறது.

அதே நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்கள், உணவு வழங்கல் நிறுவனங்களுக்குப் பணிக்கு வருபவர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. ‘எச்1 பி’ விசாவுக்கான கட்டணத்தை 20 ஆயிரம் டாலராக உயர்த்தவும் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. 
Tags:    

Similar News