செய்திகள்
மூளை அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி

மூளை அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி

Published On 2020-06-08 04:13 GMT   |   Update On 2020-06-08 04:13 GMT
இங்கிலாந்து நாட்டில் மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்த ஜிம் மர்பி என்ற நபர், தனது அறுவை சிகிச்சையை செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்து அதை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ‘வாட்ஸ்-அப்’மூலம் பகிர்ந்து கொண்டார்.
லண்டன் :

இங்கிலாந்து நாட்டில் ஜிம் மர்பி என்ற 54 வயது நபர், மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் ஹல் என்ற இடத்தில் உள்ள ஹல் ராயல் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைப்பகுதிக்கு மட்டுமே மயக்க மருந்து கொடுத்து, சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக அறுவை சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சையை அவர் தனது செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்து அதை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ‘வாட்ஸ்-அப்’மூலம் பகிர்ந்து கொண்டார். முதலில் அதைப் பார்த்த யாருமே நம்பவில்லையாம்.

இதுபற்றி அவர் கூறுகையில், “அறுவை சிகிச்சையின் போது நம்பிக்கையாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அதனால் விழித்திருந்தேன். அறுவை சிகிச்சையை நான் ரசித்தேன். அறுவை சிகிச்சை கருவிகளின் சத்தத்தை மூழ்கடிக்க நான் இசை கேட்டேன். நண்பர்களுடன் பேசினேன்” என்றார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம், மர்பியை போன்று அவரது மனைவிக்கும் மூளையில் கட்டி இருந்து 18 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளனவாம். மர்பின் மூளை அறுவை சிகிச்சை ‘செல்பி’ படம், சமூக ஊடகங்களில் வைரலானது.

Tags:    

Similar News