செய்திகள்
கிம் ஜாங் அன்

கிம் ஜாங் அன்னுக்கு நினைவு பதக்கம்: ரஷியா வழங்கியது

Published On 2020-05-06 03:18 GMT   |   Update On 2020-05-06 03:18 GMT
2-ம் உலகப்போர் வெற்றியின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு ரஷியா பதக்கம் வழங்கியுள்ளது.
பியாங்யாங் :

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படையை ரஷியா வென்றதை நினைவுகூரும் வகையில், 75-வது ஆண்டு வெற்றி விழாவை இந்த மாத தொடக்கத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாட ரஷியா திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷியாவில் 2-ம் உலக போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 2-ம் உலகப்போர் வெற்றியின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு ரஷியா பதக்கம் வழங்கியுள்ளது.

இது குறித்து வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் உள்ள ரஷிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2-ம் உலகப்போரின் போது வடகொரியாவின் மண்ணில் இறந்த மற்றும் அங்கு புதைக்கப்பட்டுள்ள சோவியத் வீரர்களின் நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதில் கிம் ஜாங் அன் ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு நினைவு பதக்கம் வழங்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியாங்யாங்கில் உள்ள மன்சுடே அரண்மனையில் நடைபெற்ற விழாவில் ரஷிய தூதர் அலெக்சாண்டர் மாட்செகோரா இந்த நினைவு பதக்கத்தை வடகொரியா வெளியுறவு மந்திரி ரி யோங் ஹோவிடம் வழங்கினார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News