செய்திகள்
பீஜிங் சிறப்பு மருத்துவமனை

அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர்- சிறப்பு மருத்துவமனையை மூடுகிறது சீனா

Published On 2020-04-28 09:34 GMT   |   Update On 2020-04-28 14:13 GMT
சீனாவின் பீஜிங் நகரில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்த நிலையில், அந்த மருத்துவமனை மூடப்படுகிறது.
பீஜிங்:

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளில் பரவி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி உள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தீவிரமாக பரவத் தொடங்கியதும், சீன அரசு சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது.

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் வுகானில் உள்ள 16 தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், பீஜிங்கில் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த சியாடோங்சன் மருத்துவமனையும் மூடப்படுகிறது. 2003ல் சார்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் இன்றுடன் குணமடைந்தனர். இதனால், மருத்துவமனையை நாளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பீஜிங்கில் மொத்தம் 593 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். 536 பேர் குணமடைந்துள்ளனர். 

சீனாவில் இன்று 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் வெளிநாடு சென்று வந்த பயணத் தொடர்பு உள்ளவர்கள் என்றும் தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. 

சீனாவில் இதுவரை 82,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4633 பேர் உயிரிழந்துள்ளனர். 648 பேர் மருத்துவமனையில் உள்ளனர். 77,555 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

வெளிநாட்டு பயண தொடர்பு மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1639 ஆக உயர்ந்திருப்பதாகவும், இதில் 552 பேர் மருத்துவமனையில் உள்ளனர் என்றும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News