செய்திகள்
கர்ப்பிணி சாவு

பாகிஸ்தானில் ஊரடங்கு: பட்டினியால் கர்ப்பிணி சாவு

Published On 2020-04-21 03:26 GMT   |   Update On 2020-04-21 03:26 GMT
ஊரடங்ககால் பெரும்பாலான தினசரி கூலித் தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் சாப்பிட கூட வழியில்லாமல் பட்டினியால் கர்ப்பிணி பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
இஸ்லாமாபாத் :

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால் பெரும்பாலான தினசரி கூலித் தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் சாப்பிட கூட வழியில்லாமல் பட்டினியால் கர்ப்பிணி பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மிர்பூர் காஸ் மாவட்டத்தின் ஜூடோ நகரில் வசித்து வருபவர் அல்லா பக்ஸ். இவருடைய மனைவி சுக்ரா பீபி (வயது 30). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுக்ரா பீபி மீண்டும் கர்ப்பமானார். ஏழ்மையில் இருந்தாலும் தினசரி கூலித் தொழிலுக்கு சென்று அல்லா பக்ஸ் தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அல்லா பக்ஸ் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். அவருடைய குடும்பத்தினர் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியின்றி தவித்தனர். இந்த கொடுமையின் உச்சகட்டமாக சுக்ரா பீபி பட்டினியால் கடந்த வாரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடைய உடலை கூட அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்த அல்லா பக்சுக்கு உள்ளூர்வாசிகள் பணம் திரட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பட்டினி சாவு குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிந்து மாகாண அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News