செய்திகள்
கப்பல் மருத்துவமனை

அமெரிக்க கப்பல் மருத்துவமனையில் 90 சதவீத படுக்கைகள் காலி- கட்டுக்குள் வருகிறதா கொரோனா?

Published On 2020-04-18 03:52 GMT   |   Update On 2020-04-18 03:52 GMT
அமெரிக்காவில் உள்ள கப்பல் மருத்துவமனையில் 90 சதவீத படுக்கைகள் காலியாக இருப்பதால், நியூயார்க் நகம் முன்னேறி வருவதை காட்டுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக நியூயார்க் நகரம் கொரோனா வைரசின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் அளிக்காத நிலையில், உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்ததையடுத்து தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. மேலும்  நியூயார்க் நகருக்கு அமெரிக்க கடற்படை மருத்துவமனை கப்பல்களில் ஒன்றான யு.எஸ்.என்.எஸ். கம்பார்ட், அனுப்பி வைக்கப்பட்டது. இங்கு கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ராணுவ நெறிமுறைகள் காரணமாக பல நோயாளிகளை இந்த கப்பலில் அனுமதிக்க மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.



இந்நிலையில், கடற்படை மருத்துவமனை கப்பலில் 80க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருவதாகவும், சுமார் 90 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய அதிபர் டிரம்ப், கப்பலில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது, நியூயார்க் நகரம் கொரோனா தடுப்பில் முன்னேறி வருவதை காட்டுவதாக தெரிவித்தார். 

இது ஒருபுறமிருக்க, நியூயார்க்கில் தினமும் கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைக் சுட்டிக் காட்டிய கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, கொரோனா வைரசை கட்டுப்படுத்த தனது மாநிலம் இன்னமும் போராடி வருவதாக கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News