செய்திகள்
ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

கொரோனா பாதிப்பு தீவிரம்... ஊரடங்கை காலவரையின்றி நீட்டித்தது சவுதி அரேபியா

Published On 2020-04-13 03:53 GMT   |   Update On 2020-04-13 03:53 GMT
சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரியாத்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மருத்துவத் துறைக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இன்றைய நிலவரப்படி 18.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 

கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைக்கு வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கவும், வைரஸ் பரவாமல் தடுக்கவும் சமூக இடைவெளி தான் ஒரே தீர்வாக கருதப்படுகிறது. எனவே, பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

அவ்வகையில் சவுதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவை காலவரையின்றி நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. 

தலைநகர் ரியாத் மற்றும் பிற பெரிய நகரங்களில் திங்கட்கிழமை முதல் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தினமும் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

நாடு முழுவதும் முதலில் 3 வாரங்கள் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதுவும் மாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டிந்தது. அதன்பின்னர் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் ஊரடங்கு உத்தரவு தேதி குறிப்பிடப்படாமல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் முக்கிய பணியாளர்கள் மட்டும் வெளியில் செல்வதற்கு ஏதுவாக புதிய அனுமதிகள் வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் 59 உயிரிழப்புகளுடன் 4,462 நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளன. வளைகுடா நாடுகளில் சவுதியில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் மொத்தம் 14,100 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 பேர் இறந்துள்ளனர். 

சவுதியில் வரும் வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனவே  சர்வதேச பயணிகள் விமானங்களை சவுதி அரசு நிறுத்தியுள்ளது. ஆண்டு முழுவதும் உம்ரா யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பெரும்பாலான பொது இடங்களை மூடியுள்ளது. மற்ற வளைகுடா நாடுகளும் இதே போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. 
Tags:    

Similar News