செய்திகள்
போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்

கொரோனா வைரஸ்: சீனாவுடனான எல்லையை மூடுங்கள் - ஹாங்காங்கில் மருத்துவர்கள் 'ஸ்டிரைக்’

Published On 2020-02-04 06:59 GMT   |   Update On 2020-02-04 06:59 GMT
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதால் அதன் எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹாங்காங்கில் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஹாங்காங்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.

நேற்றைய நிலவரப்படி 361 ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரே நாளில் 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்றைய நிலவரப்படி 17,205 பேருக்கு பரவியிருந்த இந்த வைரஸ் தற்போதைய நிலவரப்படி 20,438 பேருக்கு பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு வெளியே அந்நாட்டின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் தன்னாட்சி நகரமான ஹாங்காங்கில் இந்த வைரசுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல் பிலிப்பைன்சிலும் இந்த வைரசுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து சீனாவுக்கு வெளியே இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் சீனாவுக்கு வெளியே 180 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீனாவின் வுகான் நகரில் இருந்து ஹாங்காங் வந்த 39 வயது நிரம்பிய நபர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். 



இதையடுத்து ஹாங்காங்கில் உள்ள மருத்துவர்கள் சீனாவுடனான எல்லையை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சீனாவுடனான சாலைவழி மற்றும் கடல்வழி எல்லைகள் மூடப்படாததால் அங்கிருந்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் ஹாங்காங் நகருக்குள் சுலபமாக நுழைகின்றனர். இதனால் வைரஸ் ஹாங்காங்கிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், சீனாவுடனான எல்லைகள் உடனடியாக மூடப்படாவிட்டால் வைரஸ் பாதிப்பு அதிகமாகி பலி எண்ணிக்கை உயரக்கூடும். ஆகவே ஹாங்காங் நிர்வாகம் சீனாவுடனான எல்லைகளை எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் ஹாங்காங்கில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்தால் நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

இதற்கிடையில், ஹாங்காங்-சீனா இடையேயான எல்லைகள் மூடப்படாது என ஹாங்காங் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் போராட்டம் தொடரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News