செய்திகள்
ஈரான்

அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளால் தாக்க தயாராக இருந்தோம் - ஈரான் ராணுவ அதிகாரி

Published On 2020-01-10 01:20 GMT   |   Update On 2020-01-10 01:20 GMT
அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளால் தாக்க தயாராக இருந்தோம் என்று ஈரான் ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
டெஹ்ரான்:

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நீண்டகாலமாக மோதல் இருந்துவருகிறது. இதனால் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா குண்டுவீசி கொன்றது.

இதற்கு பதிலடியாக ஈராக்கில் எர்பில் மற்றும் அல்-ஆசாத் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து ஈரான் வான் தாக்குதலுக்கு தலைமை ஏற்றுள்ள பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாடேஹ் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் கூறியதாவது:-

புதன்கிழமை அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது 13 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தயாராக இருந்தோம். இந்த தாக்குதலில் டஜன் கணக்கில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர், சிலர் காயம் அடைந்தனர். இந்த நடவடிக்கைக்கு பின்னர் நாங்கள் யாரையும் கொல்லவில்லை.

ஏவுகணை தாக்குதல் நடத்திய அதேசமயத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் இருக்கும் கண்காணிப்பு கருவிகளில் சைபர் தாக்குதலும் எங்கள் படைகளால் நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனாலும் இந்த தாக்குதலில் தங்கள் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியன் உயர் அதிகாரி, “அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தவிர்க்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரான அபாயகரமான செயல்களை தவிர்க்க வேண்டும்” என்று ஈரான் அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் வெளியுறவு மந்திரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்ற நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளார்கள்.
Tags:    

Similar News