என் மலர்
நீங்கள் தேடியது "Iran"
- ஈரானில் மாஷா அமினி என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார்
- மாஷாவின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.
தெஹ்ரான்:
ஈரானைச் சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை சாரா காடெம் (வயது 25), சமீபத்தில் கஜகஸ்தானில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்றார். அப்போது, அவர் ஹிஜாப் அணியாமல் விளையாடினார். ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
ஈரானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறி சாரா காடெம், சர்வதேச போட்டியில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஈரான் திரும்ப முடியாது. ஈரான் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. தற்போது அவர் ஸ்பெயினில் குடும்பத்தினருடன் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி (22) என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி அவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தார். மாஷாவின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.
இந்த போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். சுமார் 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. அரசு எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனைகளை நிறைவேற்றி உள்ளது. மேலும் பலருக்கு மரண தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ வைரலான நிலையில், இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
- இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இது பார்க்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் ஆணுடன் சேர்ந்து பொது இடங்களில் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதிகளை மீறிய ஜோடி பொது இடத்தில் நடனம் ஆடி உள்ளது. அத்துடன் அந்த பெண் இஸ்லாமிய பெண்கள் அணியவேண்டிய முக்காடு அணியவில்லை.
அவர்கள் மீது தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில், அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும், ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர்களாக அறியப்படும் இந்த இளம் ஜோடி மீது, ஊழல் மற்றும் விபச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இத்தகவலை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
- போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் தலைவர்கள் மரண தண்டனையை பயன்படுத்துவதாக புகார்.
டெஹ்ரான்:
ஈரானில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம் பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் அங்கு போராட்டம் வெடித்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இது அந்நாட்டு இஸ்லாமிய குடியரசிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 23 வயதான மொஹ்சென் ஷெகாரி மற்றும் மஜித்ரேசா ரஹ்னாவார்ட் ஆகியோருக்கு கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும் போராட்ட வழக்கில் சிக்கிய ஒரு மருத்துவர், ராப் இசை கலைஞர் மற்றும் ஒரு கால்பந்து வீரர் உட்பட இருபது பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. மக்கள் மத்தியில் அச்சத்தை பரப்பவும், நாடு தழுவிய போராட்டங்களை கட்டுப்படுத்தவும் ஈரான் தலைவர்கள் மரண தண்டனையை பயன்படுத்துவதாக ஈரான் மனித உரிமை குழு இயக்குனர் மஹ்மூத் அமிரி குற்றம் சாட்டியுள்ளார்.
- உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு, ஈரான் உதவி வருகிறது.
- ஈரானுக்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை ரஷியா அளிக்கிறது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு நூற்றுக்கணக்கான தாக்குதல் ட்ரோன்களை, ஈரான் வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஆழமான பாதுகாப்பு கூட்டணி, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு ஈரான் உதவுவதை வெளிக்காட்டுவதாக பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை விற்பனை செய்ய ஈரான் பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க கூறியுள்ளது. இதைடுத்து ஈரானிய நிறுவனங்கள் மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வெள்ளை மாளிகை அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷியா, ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். வான் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட ஈரானுக்கு மேம்பட்ட ராணுவ உதவியை வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷியா அளித்து வருவதாகவும், அடுத்த வருடத்திற்குள் போர் விமானங்களை ரஷியாவிடம் இருந்து ஈரான் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போர் விமானங்கள் அந்த பிராந்திய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈரானின் விமானப்படையை கணிசமாக பலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தனிநபர்களை கடத்தி விசாரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
- கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
தெக்ரான்:
இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோர் மீது ஈரானில வழக்கு தொடரப்பட்டிருந்தது. உளவாளிகள் என்று கூறப்படும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. தனியார் மற்றும் பொது சொத்துக்களை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு பேருக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
- ஹிஜாப் போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது.
- போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல்.
இசே:
ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர் காயமடைந்தததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் ஈரானில் நடைபெற்று வரும், நாடு தழுவிய போராட்டங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகின. முன்னதாக நேற்று பிற்பகுதியில் இசே நகரின் பல்வேறு பகுதிகளில் கூறிய ஹிஜாபிற்கு எதிரான போராட்டக்காரர்கள் ஈரான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.காவல்துறையினர் மீது அவர்களை கற்களை வீசினர்.
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. முன்னதாக கடந்த மாதம் ஒரு புனித ஸ்தலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் காயமடைந்ததாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- துப்பாக்கி சூடு நடத்திய இருவர் கைது, ஒருவன் தப்பியோட்டம்.
தெக்ரான்:
ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ந்தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தின் 40வது நாளான நேற்று அந்நாட்டின் இரண்டாவது புனிதத் தலமான ஷா செராக் மசூதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாவும், அரசுத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி ஏந்திய இருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒருவன் தப்பியோடி விட்டதாகவும், ஈரான் நீதித்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் வெளிநாட்டினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று, ஈரானிய செய்தி இணையதளம் கூறியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடும் பதிலடியை திரும்ப பெறுவார்கள் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி குறிப்பிட்டுள்ளார்.
- அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை தூண்டி விட்டுள்ளன.
- ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க சதி திட்டம்.
ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக கூறி ஈரானில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் அது தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஹிஜாப் போராட்டம் ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி என்று அந்நாட்டு தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கியது முதல் மவுனம் காத்து வந்த அவர் தனது கருத்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார்.
மாஷா அமினி போலீஸ் காவலில் இறந்ததை அறிந்து தாம் மனம் உடைந்ததாகவும் அவரது மரணம் மிகவும் துயரமானது என்றும் கொமெனி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
- அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் விசாரணை
- ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது
தெஹ்ரான்:
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்குவதாகவும் அமெரிக்கா கூறி உள்ளது.
இந்நிலையில், உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்கவேண்டுமானால், அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்களில் யுரேனிய தடயங்கள் தொடர்பான விசாரணையை சர்வதேச ஆய்வாளர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கூறி உள்ளார்.
அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஈரானை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி வலியுறுத்துகிறது. மேலும், ஈரான் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அணு ஆயுத திட்டத்தை 2003 வரை நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆகியவை கூறியுள்ளன. ஆனால், அணு ஆயுத குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
- ஈரானின் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.
- நாடு முழுவதும் பருவகால மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரிக்கை.
தெற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியால், தாழ்வான பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர். இதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக பல தசாப்தங்களாக வறட்சியை சந்தித்து வரும் ஈரானின், நாடு முழுவதும் பருவகால மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து நகர ஆளுநர் யூசப் கரேகர் கூறியதாவது:-
கனமழையால் எஸ்தாபன் நகரின் ரௌட்பால் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளர். ஆறு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.