செய்திகள்
தீயை அணைக்கும் வீரர் (கோப்புப்படம்)

எகிப்தில் சோகம் - திருட முயன்றபோது எண்ணெய் கசிந்து தீவிபத்தில் 7 பேர் பலி

Published On 2019-11-14 12:48 GMT   |   Update On 2019-11-14 12:48 GMT
எகிப்தில் மர்ம மனிதர்கள் எண்ணெய் திருட முயன்றதால் குழாயில் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
கெய்ரோ:

எகிப்து நாட்டின் இத்தாலி எல் பரூட் மாவட்டத்தில் நைல் டெல்டா கிராமம் உள்ளது. அலெக்சாண்டிரியா நகரிலிருந்து தலைநகர் கெய்ரோவிற்கு எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் இப்பகுதி வழியே செல்கிறது.

நேற்று மதியம் மர்ம மனிதர்கள் சிலர் இந்த எண்ணெய் குழாயில் இருந்து எண்ணெய் திருட  முயன்றுள்ளனர். இதனால் வடிகால் உள்பட அருகிலிருந்த பகுதிகளில் பெட்ரோல் சிந்தியது. இதையடுத்து எரிபொருள் தீப்பிடித்தது. தீ மளமளவென பரவத்தொடங்கியது.  

இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. விபத்து ஏற்படுவதற்கு முன்னர் மக்கள் பெட்ரோலை சேகரிக்க முயன்றனர். பின்பு தீப்பிடித்ததால் அலறியடித்து ஓடத்தொடங்கினர். அதில் சிலர் தீயை அணைக்க முயன்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அப்பகுதியில் இருந்த சில வாகனங்கள் தீயில் கருகின. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். மீட்புப்படையினர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News