செய்திகள்
தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தீப்பிடித்து, கொளுந்து விட்டு எரிந்ததை படத்தில் காணலாம்.

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீ: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு

Published On 2019-11-01 02:22 GMT   |   Update On 2019-11-01 02:22 GMT
பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்து விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
லாகூர் :

பாகிஸ்தானில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

இந்த ரெயில், நேற்று அதிகாலை லாகூரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ரகீம் யார்கான் என்ற இடத்துக்கு அருகே நேற்று காலை சென்றது. அந்த ரெயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் சிறிய அளவிலான கியாஸ் சிலிண்டர்கள் இணைந்த ஸ்டவ்வில் காலை உணவு சமைத்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பெட்டியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பிற பெட்டிகளுக்கும் பரவியது. பயணிகள் அலறினர். அதைத் தொடர்ந்து ரெயில் நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் (10 பிரிவுகள்) சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் 3 பெட்டிகள் தீயின் பிடியில் முழுமையாக சிக்கி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. பிற பெட்டிகளுக்கும் தீ பரவிக்கொண்டிருந்தது. அங்கே பெரிய அளவில் கரும்புகை மண்டலமும் உருவானது.

சமையலுக்காக பயணிகள் வைத்திருந்த எண்ணெய்யும் சிக்கிக்கொண்டதால், தீ வேகமாக பரவி, கொளுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த கோர தீ விபத்தில் 73 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் பலர், ரெயில் ஓடிக்கொண்டிருந்தபோது, தீயில் இருந்து தப்பிக்க குதித்ததில் உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் தீயில் சிக்கியும், புகையில் மூச்சு திணறியும் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலரது உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிக்கட்டைகள் போல ஆகி விட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர்கள், ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்துத்தான் தீப்பிடித்ததாக ரெயில்வே மந்திரி ஷேக் ரசீத் அகமது கூறினார்.

இந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகளில் பெரும்பாலோர், ரைவிந்த் என்ற இடத்தில் நடைபெறும் வருடாந்திர மத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தப்லீஹி ஜமாத் சன்னி முஸ்லிம் அமைப்பினர் செய்திருந்தனர்.

இந்த அமைப்பின் நிர்வாகிகள், ரெயில் தீ விபத்துக்கு பயணிகள் சமையல் செய்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்ததுதான் காரணம் என ரெயில்வே மந்திரி ஷேக் ரசீத் அகமது கூறியதை மறுத்தனர். ரெயில் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டதுதான் தீ விபத்துக்கு காரணம் என அவர்கள் கூறினர்.

ரெயில் விபத்தில் சிக்கிய பயணிகள் பலரும் இதே போன்று கருத்து தெரிவித்தனர்.

தீ விபத்தில் முழுமையாக எரிந்த 11-வது பெட்டியில் 54 பயணிகளும், 12 மற்றும் 13-வது பெட்டிகளில் தலா 78 பயணிகளும் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து பிரதமர் இம்ரான்கான் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தொலைதூர ரெயில்களில் பயணிகள் ஸ்டவ் கொண்டு வந்து சமைப்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News