செய்திகள்
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி

Published On 2019-08-17 09:23 GMT   |   Update On 2019-08-17 09:23 GMT
ஹாங்காங்கில் கைதிகள் ஒப்படைப்பு மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் நேற்று பேரணி நடை பெற்றது.
மாஸ்கோ:

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது.
 
இதனால், கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் 
அறிவித்தார். ஆனாலும் போராட்டக்காரர்கள் சமரசம் ஆகவில்லை. மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஹாங்காங் மக்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர். 

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறும், அதற்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான கலவர வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த பேரணியை நடத்தினர். பேரணியின் போது ஒற்றுமை பற்றிய வாசகங்கள் ஏந்திய பதாகைகளையும், போராட்டத்தில் காயமடைந்தவர்களின் படங்களையும் ஏந்திக்கொண்டு வந்தனர். அனைவரும் முகமூடிகள் அணிந்திருந்தனர்.

சிட்னி நகரின் மார்ட்டின் என்ற இடத்தில் நடந்த பேரணியில் திடீரென சீன ஆதரவாளர்கள் நுழைந்து ‘ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதி’ என கோஷமிட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதே போன்று மெல்போர்ன் நகரிலும் பேரணியில் சீன ஆதரவாளர்கள் குறுக்கிட்டு பிரச்சனை செய்ததால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு போலீசார் வந்து கூட்டத்தை கலைத்தனர்.


Tags:    

Similar News