செய்திகள்
வால்மார்ட் துப்பாக்கி விற்பனை

துப்பாக்கிச் சூடு எதிரொலி: வால்மார்ட் துப்பாக்கி விற்பனையை தடை செய்ய கோரிக்கை

Published On 2019-08-06 05:47 GMT   |   Update On 2019-08-06 08:20 GMT
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக அந்நாட்டில் வால்மார்ட், துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான டெக்சாஸ் , ஒஹியோ மற்றும் சிகாகோ நகரங்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகளினால் அப்பகுதிகள் சற்று நிலைகுலைந்துள்ளன.

கடந்த சனிக்கிழமையன்று டெக்சாஸ் மாகாணத்தின் எல் பசோ நகரத்தில் உள்ள வால்மார்ட் சீலோ விஸ்டா மாலில் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை தனது துப்பக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளப்பில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். 



மீண்டும் ஞாயிறன்று சிகாகோ நகரின் டக்ளஸ் பூங்காவிற்கு காரில் வந்த ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களினால் அப்பகுதி மக்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வரும் வால்மார்ட் கடைகள் ஏற்கனவே துப்பாக்கி விற்பனைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மேலும் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி விற்பனையையும் நிறுத்தியது.

இந்நிலையில் பொது மக்கள் சார்பில் வால்மார்ட்,  துப்பாக்கி விற்பனையை நிறுத்தவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நிறுவனம் சார்பில் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News