செய்திகள்

இடாய் புயல் பாதிப்பால் ஜிம்பாப்வே நாட்டில் 268 பேர் உயிரிழப்பு

Published On 2019-04-03 09:40 GMT   |   Update On 2019-04-03 09:40 GMT
ஜிம்பாப்வே நாட்டை சமீபத்தில் தாக்கிய இடாய் புயலின் பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 268 பேர் உயிரிழந்தனர். #CycloneIdai #deathtollrises #Idaideathtoll
ஹராரே:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை கடந்த மாதம் மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில் ‘இடாய் புயல்’ தாக்கியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன.

இடாய் புயலின் கோரத்தாண்டவத்துக்கு மொசாம்பிக் நாட்டில் சுமார் 500 பேர் பலியாகினர். தெற்காப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் கிழக்கு பகுதியையும் இந்த கோரப்புயல் பதம் பார்த்தது.



புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலைகளை வெள்ளநீர் அடித்துச் சென்று விட்டதால் நகரங்கள் எல்லாம் தீவு கூட்டங்களாக காட்சி அளிக்கின்றன.

இதனால், வெள்ள நீருக்கு இடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு போதுமான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க முடியாமல் அரசு திண்டாடி வருகிறது. மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி உயிரிழந்த பலரது பிரேதங்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சில இடங்களில் வெள்ளத்தில் பிணங்கள் அடித்துச் செல்லப்படுவதை காண முடிகிறது.

இந்நிலையில், இடாய் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம்சார்ந்த விபத்துகளில் இதுவரை 268 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி மோனிகா முட்ஸ்வாங்வா நேற்று தெரிவித்துள்ளார். #CycloneIdai #deathtollrises  #Idaideathtoll
Tags:    

Similar News