செய்திகள்

தாய்லாந்தில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்

Published On 2019-03-26 18:47 GMT   |   Update On 2019-03-26 18:47 GMT
தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொடர்ச்சியான புகார்கள் மற்றும் முறையற்ற தகவல்கள் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #ThailandElection
பாங்காக்:

தாய்லாந்தில் 2014-ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பொதுத்தேர்தல் நடந்தது. 5 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்த நிலையில், இந்த தேர்தலில் 64 சதவீத வாக்குகள்தான் பதிவானது.

ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்குப்பதிவு முடிந்தபிறகு 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணிக்கை முடிந்துவிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ராணுவ ஆதரவு பெற்ற கட்சியான பாலங் பிரச்சா ரத் கட்சி முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. அதன்படி தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தலைமையில் அரசு அமைக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. ஆனால் தொடர்ச்சியான புகார்கள் மற்றும் முறையற்ற தகவல்கள் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து தேர்தல் முடிவுகள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அதிகாரப்பூர்வமான முழுமையான முடிவுகள் மே மாதம் வரை வெளியிடப்படாது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி உள்ள முன்னாள் பிரதமர் தக்‌ஷின் ஷினவத்ரா, முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News