செய்திகள்

இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை

Published On 2018-05-15 18:52 GMT   |   Update On 2018-05-15 18:52 GMT
இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #NorthKorea #SouthKorea
சியோல்:

கொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.

கடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டு உள்ளன” என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.

இந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த தகவல்களை தென்கொரிய ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News