செய்திகள்

கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை

Published On 2018-04-27 05:05 GMT   |   Update On 2018-04-27 05:05 GMT
கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள். #SaudiArabiadeathPenalty

ரியாத்:

சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள்.

இத்தகவலை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அதில், “சவுதிஅரேபியாவில் குற்ற வழக்குகளில் விசாரணை நடைமுறை மிகவும் கவலை அளிக்கிறது.

சவுதிஅரேபியாவில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவது நல்லதல்ல. போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை குறைக்க நீதித்துறை நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் ‘டைம்‘ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது “கொலை வழக்கை தவிர மற்ற குற்ற வழக்குகளில் மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.

சவுதியில் கடந்த ஆண்டில் மட்டும் 150 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 600 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களில் பெரும் பாலானோர் போதைப் பொருள் கடத்தியவர்கள். #SaudiArabiadeathPenalty

Tags:    

Similar News