செய்திகள்

வங்காள தேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் கலவரம் - 100 மாணவர்கள் காயம்

Published On 2018-04-10 09:40 GMT   |   Update On 2018-04-10 09:40 GMT
வங்காள தேசத்தில் மைனாரிட்டி சமூகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு வேலை வாய்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
டாக்கா:

வங்காள தேசத்தில் 1971-ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 56 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக வகுப்புகளை புறக்கணித்து விட்டு பல்கலைக்கழக மைதானத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டனர். வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் இப்போராட்டம் சிட்டகாங், குல்னா, ரான்ஷாகி, பரிசால், ரங்பூர், ஷில்கெட், சாவர் ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும் பரவியது.

இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். சவார் நகரில் ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமாக மாறியது.

கலவரத்தை அடக்க போலீசார் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதே போன்று தலைநகர் டாக்காவிலும் கலவரம் மூண்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

டாக்கா பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. தெருக்களில் இருந்து வெளியேறாமல் மாணவர்கள் போராடி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

இப்போராட்டம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவரது ஆட்சி காலத்தில் இதுபோன்ற மிகப்பெரிய மாணவர் போராட்டம் இதுவரை நடந்ததில்லை. #tamilnews #bangladesh
Tags:    

Similar News