செய்திகள்

நேபாளத்தில் ஒன்றாக இணைந்தது புதிய அவதாரமெடுத்த ஆளும் இடதுசாரி கட்சிகள்

Published On 2018-02-20 14:17 GMT   |   Update On 2018-02-20 14:17 GMT
நேபாளத்தில் இரு முக்கிய பிரிவுகளாக உள்ள ஆளும் இடதுசாரி கட்சிகள் ஒரே கட்சியாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என ஒருங்கிணைந்துள்ளது. #Nepal
காத்மண்டு:

மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பின்னர் குடியரசு நாடானது. 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய இரண்டு சபைகள் கொண்ட பாராளுமன்றம் அமைக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் சென்டர்) கட்சிகள் அடங்கிய கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

பாராளுமன்ற மேல்சபை தேர்தலிலும் மொத்தமுள்ள 59 இடங்களில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கினைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி 27 இடங்களையும், மாவோயிஸ்ட் சென்டர் கட்சி 12 இடங்கள் என இடதுசாரிகள் கூட்டணி 39 இடங்களில் வென்றது. 

தேர்தல் முடிவுகளை அடுத்து, புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி தலைவரான சர்மா ஒலி தேர்வு பதவியேற்றார். 

இதற்கிடையே இரண்டு கட்சிகளையும் இணைப்பது தொடர்பாக முடிவெடுக்க அமைத்த குழுவின் முடிவுப்படி, இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என இனி அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சர்மா ஒலி, 
மாவோயிஸ்ட் சென்டர் கட்சியின் தலைவராக இருந்த பிரசந்தா ஆகியோருக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் சம அதிகாரங்கள் கொண்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரு பிரிவுகள் இணைந்ததன் மூலம் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பழைய பலத்தை பெற்று புதிதாக உருவெடுத்துள்ளதாக அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். #Nepal #TamilNews
Tags:    

Similar News