செய்திகள்

ஆப்கன் சொகுசு ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

Published On 2018-01-21 16:21 GMT   |   Update On 2018-01-21 16:21 GMT
ஆப்கன் தலைநகர் காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுல் நகரின் மையப்பகுதியில் உள்ள இன்டர்கான்டினென்ட்டல் என்ற சொகுசு ஓட்டலின் சமையலறை வழியாக நேற்று பின்னிரவு தீவிரவாதிகள் சிலர் நுழைந்தனர். அவர்கள் கண்ணுக்கு எதிரில் தென்பட்டவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் ஓட்டலின் ஒரு பகுதி தீக்கிரையானது. உயிர் பயத்தில் பலர் கூச்சலிட்டபடி ஓடிச்சென்று மற்றவர்களின் அறைகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 13 மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில், ஓட்டலில் தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் அந்த ஓட்டலில் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு பெண் உள்பட 6 பேர் பலியானதாக அரசு வட்டாரங்கள் முதல் கட்டமாக  தெரிவித்தன.

இந்நிலையில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கண்டனம் தெரிவித்துள்ளார்.#Tamilnews
Tags:    

Similar News