செய்திகள்

வேர்க்கடலைக்காக லண்டன் தூதரகத்தை விற்ற ஒபாமா: டிரம்ப் பாய்ச்சல்

Published On 2018-01-12 13:40 GMT   |   Update On 2018-01-12 13:41 GMT
லண்டன் நகரின் மையப்பகுதியில் இருந்த அமெரிக்க தூதரகத்தை வேர்க்கடலை விலைக்கு விற்ற ஒபாமா அரசால் கட்டப்பட்ட புதிய தூதரக திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.#Trump #Londonembassy #Obama
லண்டன்:

பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள மேஃபேர் மாவட்டம், குராஸ்வெனார் சதுக்கத்தில் இயங்கிவந்த அமெரிக்க தூதரகத்துக்கு பதிலாக தேம்ஸ் நதிக்கரையின் தெற்கு கரைப்பகுதியில் புதிய தூதரகம் ஒன்றை 100 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆட்சிக்காலத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

லண்டனில் மிக அதிக விலைமதிப்புள்ள பகுதியில் உள்ள தூதரக நிலம் உள்ளிட்ட அமெரிக்க அரசுக்கு சொந்தமான சில சொத்துகளை விற்று புதிய தூதரக கட்டிடத்தை உருவாக்க பின்னர் ஆட்சிக்கு வந்த ஒபாமா நிர்வாகம் அனுமதி அளித்தது.

பின்னர், அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு கடந்த 2017-ம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றபோது பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, அரசுமுறை விருந்தினராக தங்கள் நாட்டுக்கு வருமாறு டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த (2017) ஆண்டில் டிரம்ப் பிரிட்டன் நாட்டுக்கு செல்வார். ராணி எலிசபத் அளிக்கும் விருந்தில் பங்கேற்பார் என முன்னர் செய்திகள் வெளியாகின. 

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்கள்மீது கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்ட டிரம்ப் பிரிட்டனுக்கு வந்தால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அந்நாட்டில் உள்ள சில அமைப்புகள் தெரிவித்திருந்தன. 

இந்நிலையில், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரிட்டன் நாட்டுக்கு செல்வார். தேம்ஸ் நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள புதிய அமெரிக்க தூதரகத்தை அவர் திறந்து வைப்பார் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அவரது சுற்றுப்பயணத்துக்கான திட்டமும் முன்னர் வெளியாகி இருந்தது.

தற்போதைய அமெரிக்க தூதரகம்
இந்நிலையில், புதிய தூதரக கட்டிடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். ’நான் ஒன்றும் ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் தீவிர விசிறி அல்ல. லண்டன் நகரின் சிறப்புமிக்க பகுதியில் இருந்த தூதரகத்தை வேர்க்கடலை விலைக்கு விற்ற ஒபாமா அரசால் 120 பில்லியன் டாலர் செலவில் தொலைதூரத்தில் கட்டப்பட்ட புதிய தூதரகத்தை ரிப்பன் வெட்டி நான் திறந்து வைப்பதா? என்னால் முடியாது’ என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அமெரிக்க தூதரகம்
டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியான பின்னரும், புதிய தூதரக திறப்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு அமெரிக்க அதிபருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே இன்று தெரிவித்துள்ளார். #tamilnews #Trump #Londonembassy #Obama
Tags:    

Similar News