செய்திகள்
அதிபர் நிக்கோலஸ் மதுரோ

உள் விவகாரங்களில் தலையீடு செய்ததாக கனடா, பிரேசில் தூதர்களை வெளியேற்றிய வெனிசுலா

Published On 2017-12-24 02:04 GMT   |   Update On 2017-12-24 02:04 GMT
சட்டவிதிமுறைகளை மீறுதல் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் தலையிட்டதாக கூறி கனடா மற்றும் பிரேசில் தூதரக அதிகாரிகளை வெனிசுலா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
கராகஸ்:

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சில மாதங்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய சபையை கலைத்து விட்டு புதிதாக அரசியல் சாசன சபையை அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமைத்தார். முழுக்க முழுக்க ஆளும் கட்சியே இந்த சபையில் பங்கு வகிப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதனால், ஏற்பட்ட கலவரத்தில் 120-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அதிபர் மதுரோவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு சில தடைகளையும் விதித்தன.

கனடாவில் உள்ள வெனிசுலா தூதரக அதிகாரிகள் ஊழல் மற்றும் மனித உரிமைகளை மீறியதாக கூறி அந்நாட்டு அரசு அவர்களுக்கு சில தடைகளை விதித்தது.

வெனிசுலாவின் அண்டை நாடான பிரேசிலில் முன்னாள் அதிபர் தில்மா ரூசேப் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து மதுரோ அந்நாட்டுடன் சுமூக உறவை கடைபிடிக்கவில்லை. தில்மா பதவி நீக்கம் செய்யப்பட்டதில் சதி இருப்பதாக அவர் கூறிவந்தார். மேலும், புதிய அரசுடன் மதுரோ மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென கனடா தூதர் க்ரைப் கோவாலிக் மற்றும் பிரேசில் தூதர் ரை பெரைரா ஆகிய இருவரும் நாட்டை விட்டு வெளியேறுமாறு வென்சுலா அரசியல் சாசன சபையின் தலைமை பொறுப்பில் இருக்கும் டெல்சி ரோட்சிக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

தூதரக அதிகாரிகளுக்கான சட்டதிட்டங்களை மேற்கண்ட இருவரும் ஒழுங்காக கடைபிடிக்க வில்லை எனவும், வெனிசுலாவின் உள் விவகாரங்களில் தலையிட்டார்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News