செய்திகள்

25 ஆண்டுகளாக குடியரசு கட்சி வசமிருந்த செனட் இடம் பறிபோனது - டிரம்ப் அதிருப்தி

Published On 2017-12-13 07:23 GMT   |   Update On 2017-12-13 07:23 GMT
அமெரிக்காவின் அலபாமா மாநில செனட்டர் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சியை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோன்ஸ் வெற்றி பெற்றுள்ளது அதிபர் டிரம்ப்பை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் அலபாமா மாநில செனட் உறுப்பினருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் வழக்கறிஞர் டக் ஜோன்ஸ் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த ராய் மூர் ஆகிய இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.

தேர்தலுக்கு முன்னதாகவே மூர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சொந்த கட்சியை சேர்ந்தவர்களே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அதிபர் டிரம்ப் அவருக்கு ஆதரவாக இருந்து வந்தார். இந்நிலையில், பதிவான வாக்குகள் 99 சதவிகிதம் எண்ணப்பட்டுள்ளன.

இதில், ஜோன்ஸ் 49.9 சதவிகித வாக்குகளையும், மூர் 48.4 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஜோன்ஸின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 25 ஆண்டுகளில் அலபாமா மாநில செனட் உறுப்பினராக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இதற்கிடையே, டக் ஜோஸ்சுக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியால் செனட் சபையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிக்கு இடையே சிறிய வித்தியாசமே இருக்கிறது. இதனால், அதிபர் டிரம்ப் கொண்டு வரும் மசோதாவை கடும் சிரமத்திற்கு மத்தியிலே அவர் நிறைவேற்ற முடியும் என்ற நிலை உள்ளது. 
Tags:    

Similar News