செய்திகள்

பிரிட்டன் ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற வாலிபர் கைது

Published On 2017-12-12 00:09 GMT   |   Update On 2017-12-12 00:10 GMT
பிரிட்டன் ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற வாலிபரை லண்டன் போலீசார் கைது செய்தனர்.
லண்டன்:

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனை ஆகும். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை உச்சக்கட்ட பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும். ஆனாலும் அவ்வப்போது பாதுகாப்பு படையினரின் பார்வைக்கு தப்பி சிலர் அந்த பகுதியில் நுழைந்து அசம்பாவித சம்பவங்களை நடத்த முயன்றுள்ள சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன.

இந்த நிலையில், சுமார் 24 வயதுள்ள ஒரு வாலிபர், நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிற்கதவின் (‘கேட்’) மீது ஏற முயற்சித்தார். நல்ல வேளையாக அவர் அரண்மனைக்குள் குதிப்பதற்கு முன்பாக போலீசார் பார்த்து விட்டனர். உடனடியாக அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

அவர் மத்திய லண்டன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் நிபந்தனை ஜாமீனின் பேரில் பின்னர் விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில் இந்த சம்பவம், பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என போலீசார் தெரிவித்தனர். அந்த நபரிடம் எந்தவித ஆயுதமும் இல்லை என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் கூட, பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைய முயன்ற 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்து பின் விசாரணைக்கு பின் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News