செய்திகள்

வடகொரியாவுடன் விமான போக்குவரத்து துண்டிப்பு: சீனா

Published On 2017-11-23 07:29 GMT   |   Update On 2017-11-23 07:29 GMT
வட கொரியாவுடனான விமான போக்குவரத்தை திடீரென சீனா துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீஜிங்:

வடகொரியாவும், தென் கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்து வருகின்றன. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

இதனால் அமெரிக்காவுடன் வடகொரியா மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மீது அணுகுண்டுகளை வீசுவோம் என்றும் வடகொரியா மிரட்டி வருகிறது.

எனவே, வட கொரியாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனாலும், அடங்க மறுக்கும் வட கொரியா தொடர்ந்து அமெரிக்காவை மிரட்டி வருகிறது.

எனவே, வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார். வட கொரியாவின் நட்பு நாடாக உள்ள சீனாவிடம் அந்த நாட்டை கட்டுப்படுத்தி வைக்கும்படி கேட்டு கொண்டார்.

சமீபத்தில் டொனால்டு டிரம்ப் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது சீன அதிபர் சீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். வடகொரியா நிலவரங்கள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து சீனா தனது சிறப்பு தூதரை வடகொரியாவுக்கு அனுப்பி வைத்தது. சிறப்பு தூதர் சாங்டோ தலைமையிலான குழுவினர் வட கொரியாவுக்கு சென்று அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனாலும், வடகொரியா தனது பிடிவாத குணத்தை கைவிடவில்லை.

தற்போது கூட அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா கருத்துக்களை வெளியிட்டு உள்ளது. அமெரிக்கா தான் உலகில் தீவிரவாதிகளையே உருவாக்குகிறது என்று வடகொரியா கூறி இருக்கிறது.

இந்த நிலையில் திடீரென சீனா வட கொரியாவுடனான விமான போக்குவரத்தை துண்டித்துள்ளது.

சீனாவின் பேச்சுக்கு கட்டுப்பட வடகொரியா மறுப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆனால், சீனா இது சம்பந்தமாக கூறும்போது, வடகொரியாவுக்கு செல்லும் விமானத்தில் போதிய பயணிகள் வரவில்லை. எனவே, வர்த்தக ரீதியாக பாதிப்பு ஏற்படுவதால் போக்குவரத்த நிறுத்தி விட்டோம். இதில், அரசியல் காரணங்கள் இல்லை என்று கூறி உள்ளது. ஆனாலும், இதில் வேறு பின்னணிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Tags:    

Similar News