செய்திகள்

இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் பற்றிய தகவல்களை வழங்க ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்து பாராளுமன்றக்குழு ஒப்புதல்

Published On 2017-11-20 00:50 GMT   |   Update On 2017-11-20 00:50 GMT
வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கும் பணம் பற்றிய தகவல்களை வழங்க வகை செய்யும் ஒப்பந்தம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெர்ன்:

இந்தியாவை சேர்ந்த ஏராளமான செல்வந்தர்கள் தங்கள் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் குவித்து உள்ளனர். இந்த கருப்பு பணத்தை மீட்கவும், அது பற்றிய தகல்களை சேகரிக்கவும் அந்த நாட்டுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, அங்குள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கும் பணம் பற்றிய தகவல்களை தானாக வழங்க வகை செய்யும் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியா மற்றும் 40 நாடுகளுடன் கருப்பு பணம் பற்றிய தகவல்களை பகிர வகை செய்யும் இந்த ஒப்பந்தத்துக்கு சுவிஸ் பாராளுமன்ற கீழ்சபை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.

இதைத்தொடர்ந்து மேல்-சபையின் முக்கிய குழுவான பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரிகளுக்கான கமிஷன், இந்த ஒப்பந்தம் குறித்து ஆய்வு நடத்தியது. கடந்த 2-ந்தேதி நடந்த இந்த குழுவின் கூட்டத்தில், மேற்படி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் தனிநபர் உரிமைகளுக்கான வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

இந்த ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்காக வருகிற 27-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இரு நாடுகளுக்கு இடையே அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்கள் 2019-ம் ஆண்டு மூலம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News