செய்திகள்

ராணுவ புரட்சி: ஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலக மறுப்பு

Published On 2017-11-17 05:34 GMT   |   Update On 2017-11-17 05:35 GMT
ஆப்பிரிக்காவில் ராணுவம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் டஸ்வாங்கிரையும் முகாபே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார்.
ஹராரே:

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக ராபர்ட் முகாபே (93) அதிபராக பதவி வகித்தார். கடந்த 37 ஆண்டுகளாக இவர் அதிபராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் ஜிம்பாப்வேயில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது.

தலைநகர் ஹராரேயில் களம் இறங்கிய ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்தது. அதிபர் ராபர்ட் முகாபே கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே முகா பேவுக்கும் ராணுவத்துக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தையில் மூத்த கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் அண்டை நாடான தென் ஆப்பிரிக்காவின் தூதர்கள் ஈடுபட்டனர்.

அப்போது ராணுவம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் டஸ்வாங்கிரையும் முகாபே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார். அதை தொடர்ந்து தற்போது முகாபேயுடன் தென் ஆப்பிரிக்க வளர்ச்சி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அதன் செய்தி தொடர்பாளர் கிளேசன் மாங்யெலா தெரிவித்துள்ளார்.



துணை அதிபராக இருந்த எம்மர்சன் நங்காக்வா கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ராணுவம் ஆதரவு அளித்தது. அதனால் தான் ராணுவ புரட்சி ஏற்பட்டு முகாபேயின் ஆட்சி அதிகாரம் பறிக்கப்பட்டது.

முகாபே பதவி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அடுத்த அதிபராகும் வாய்ப்பு எம்மர்சன் நங்காக் வாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News