செய்திகள்

கடைக்கு வந்த பெண்ணை தாக்கி கற்பழிப்பு: இந்தியருக்கு 8 ஆண்டு சிறை - இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

Published On 2017-11-14 23:22 GMT   |   Update On 2017-11-14 23:22 GMT
கடைக்கு வந்த பெண்ணை தாக்கி கற்பழித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குலாத் என்பவர் குற்றத்தை ஒப்புகொண்டதால் நீதிபதி அவருக்கு 7 ஆண்டும், 8 மாதமும் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
லண்டன்:

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வந்தவர், சுவாப்னில் குலாத் (வயது 30). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பூர்வீகம், மராட்டிய மாநிலம், நாக்பூர். இவர் மான்செஸ்டரில் விதிங்டன் என்ற இடத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், அங்கு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி இரவு 40 வயது பெண் ஒருவர், தனது தோழியின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் தனது செல்போன் பேட்டரியில் ‘சார்ஜ்’ தீர்ந்து விட்டதை அறிந்தார். அருகில் குலாத் வேலை செய்த கடைக்குள் நுழைந்து அவர், தனது நிலையை சொல்லி “பேட்டரி ரீ சார்ஜ் செய்துதர முடியுமா?” என்று கேட்டார். கேட்டபடியே அங்கிருந்த மின் இணைப்பில் தனது செல்போனை ‘சார்ஜ்’ ஏறுவதற்கு பொருத்தினார். ஆனால் அதற்குள் குலாத், அந்தக் கடையின் கதவை மூடினார். அந்தப் பெண் மீது ஆவேசமாக பாய்ந்தார். அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது அவரை தாக்கி கற்பழித்தார். “இதை வெளியே போய் சொன்னால் கொலை செய்து விடுவேன்” என்று அந்தப் பெண்ணை அவர் மிரட்டினார். அந்த இரவு முழுவதும் அவரை சிறை வைத்தார். மறுநாள் காலையில்தான் விடுவித்தார்.

இதுபற்றி அந்தப் பெண், போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து குலாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கை மான்செஸ்டர் குரோன் கோர்ட்டு விசாரித்தது. விசாரணையின்போது குலாத் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி அவருக்கு 7 ஆண்டும், 8 மாதமும் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

அவர் சிறைத்தண்டனையை அனுபவித்து முடித்த பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. 
Tags:    

Similar News