செய்திகள்

கரும் புகை மூட்டத்தால் பூமிக்கு பெரும் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Published On 2017-11-14 04:35 GMT   |   Update On 2017-11-14 04:35 GMT
அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும் புகை காரணமாக பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நியூயார்க்:

பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. அதற்கு சுற்றுப்புற சூழல் மாசுவே காரணம் என கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்கள் பயன்படுத்துவதால் வளி மண்டலத்தில் ‘ஓசோன்’ மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டு அதனால் சூரியனின் வெப்பம் பூமியை தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காற்று மண்டலத்தில் ஏற்கனவே குறைவாக இருந்த மாசு அளவு தற்போது எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இதற்கு பூமியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கமும், அவர்களால் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும் புகையும் காரணமாக கூறப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் பூமிக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும். இதை 184 நாடுகளை சேர்ந்த 15 ஆயிரம் விஞ்ஞானிகள் கடிதம் மூலம் எச்சரிக்கையாக விடுத்துள்ளனர்.


‘மனித குலத்துக்கான எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ‘பயோ சயின்ஸ்’ அறிவியல் நாளிதழில் வெளியிட்டுள்ளனர். இந்த எச்சரிக்கை மனித குலத்துக்கு விடுக்கப்பட்ட 2-வது நோட்டீசு என வர்ணிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசு காரணமாக வனப்பகுதிகள் அழியும். சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். கடல்வாழ் உயிரினங்கள் அழியும். கடல்நீர் மட்டம் உயர்ந்து பேரழிவு ஏற்படும். மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த 1992-ம் ஆண்டு அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக இது போன்ற எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது 1700 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம் வெளியிடப்பட்டது.
Tags:    

Similar News