செய்திகள்

அமெரிக்காவில் கடந்த 10 மாதங்களில் 13 ஆயிரம் உயிரைக் குடித்த துப்பாக்கி குண்டுகள்

Published On 2017-11-06 13:00 GMT   |   Update On 2017-11-06 13:00 GMT
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடந்த 10 மாதங்களில் நடந்துள்ள சிறிய, பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவங்களை எடுத்துக்கொண்டால் 13,149 பேர் உயிரை இழந்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்:

வானுயர்ந்த கட்டிடங்கள், மேம்பட்ட கலாச்சாரம், வலிமையான ராணுவம் என அமெரிக்கா மீது உலகம் வைக்கும் பார்வை எப்பொதுமே உயரமானதுதான். இருப்பினும், அங்கு அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்கா மீதான பார்வையில் பயத்தை கொடுக்கிறது.

நாகரீகத்தில் மேம்பட்டு இருந்தாலும் எதற்காக இப்படி சிலர் துப்பாக்கிகளை கொண்டு அப்பாவிகளை கொன்று வருகின்றனர்? என்ற கேள்வி எழாமல் இல்லை. நேற்று, டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சுதர்லாண்ட் என்ற பகுதியில் உள்ள சர்சில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படித்தாலே மனதை மரமரத்து போகச்செய்யும்  புள்ளிவிபரம் துப்பாக்கி தாக்குதல் குறித்து வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 52,385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 13,149 பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இதில், 307 சம்பவங்கள் பெரியது என குறிப்பிடப்பட்டுள்ளன.

தீவிரவாதத்தை விட அமெரிக்காவுக்கு பெரிய தலைவலியை கொடுப்பது உள்நாட்டில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் துப்பாக்கிகள்தான். 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களை கணக்கிட்டால் இது வெறும் 1 சதவிகிதம் தான்.

இவ்வளவு பேர் மாய்ந்தாலும், துப்பாக்கிகளால் பிரச்சனை இல்லை அதனை கையாளும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தான் பிரச்சனை என பேசியிருக்கிறார் அதிபர் டிரம்ப்.

அமெரிக்கர்கள் தங்களது பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் வைத்துக்கொள்ளலாம் என்கிறது அங்குள்ள சட்டம். ஆனால், அதே துப்பாக்கிகள் மற்றவர்களின் உயிரை குடிக்கும் போது, இதில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? என்ற கேள்வி எழாமல் இல்லை.

துப்பாக்கி கலாச்சாரம் எனும் வார்த்தையை உலகிற்கு நல்கிய அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்ற நிலை இருக்கும் வரை இந்த ஆயுத பசிக்கு முடிவு என்பது இல்லை.
Tags:    

Similar News