செய்திகள்

இந்தோனேசியாவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 50 பேர் கருகி பலி

Published On 2017-10-26 19:28 GMT   |   Update On 2017-10-26 19:28 GMT
இந்தோனேஷியா நாட்டில் டாங்ஜெராங் என்ற இடத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் பலியானார்கள்.
ஜகார்த்தா:

இந்தோனேசியா நாட்டில், ஜகார்த்தா நகருக்கு தென்மேற்கில் தாங்கராங் என்ற இடத்தில் ஒரு பட்டாசு ஆலை இயங்கி வந்தது.

இந்த பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பட்டாசு வெடித்து தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து, நாலாபுறமும் சிதறின. அந்த ஆலையின் மேற்கூரை பறந்தது.



இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அலறினர். துடித்தனர். மரண ஓலமிட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் 50 தொழிலாளர்கள் உடல் கருகி செத்ததால், அவர்களை கரிக்கட்டைகளாகத்தான் மீட்க முடிந்தது. அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயின.

படுகாயம் அடைந்த நிலையில் 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடம் அளிக்கிற வகையில் இருப்பதால், பலி மேலும் உயரும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த பட்டாசு ஆலை கடந்த 6 வாரங்களாகத்தான் இயங்கி வந்ததாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்தபோது 103 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. 
Tags:    

Similar News