செய்திகள்

போர் விமானங்களை அனுப்பி வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா

Published On 2017-10-11 06:27 GMT   |   Update On 2017-10-11 06:27 GMT
கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கும் வகையில் ஆயுத பலத்தை காட்டி வரும் வடகொரியாவை எச்சரிக்கும் வகையில், அமெரிக்கா தனது போர் விமானத்தை அனுப்பி ஒத்திகை பார்த்துள்ளது.
சியோல்:

உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. வடகொரியா மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வற்புறுத்தியது. இதனால் வடகொரியா, அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியா மீது புதியதொரு தடையை விதித்தது. அந்த நாட்டின் 4 கப்பல்கள் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத வடகொரியா, போருக்கு தயாராகும் வகையில் பேசி வருகிறது. அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு ஜப்பான் போருக்கு தயாரானால் அந்த நாட்டை தவிடுப்பொடியாக்கி விடுவோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

இதனால், வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.



இந்நிலையில் நேற்று இரவு அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்ப பகுதியில் வட்டமடித்து வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளன. குவாம் தளத்திலிருந்து அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் ஜப்பான் மற்றும் தென்கொரிய வான்பகுதியில் பறந்தன. தென் கொரியாவில் சென்றபோது அவற்றுடன் தென்கொரியாவின் 2 போர் விமானங்களும் சென்றன. இதேபோல் ஜப்பான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது ஜப்பான் நாட்டின் போர் விமானங்களும் இணைந்துகொண்டன.
Tags:    

Similar News