செய்திகள்

லண்டனில் நவாஸ் ஷெரீப், பாக். பிரதமர் அப்பாசி ஆலோசனை

Published On 2017-09-25 02:34 GMT   |   Update On 2017-09-25 02:34 GMT
லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை வரவழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
லண்டன்:

பாகிஸ்தானின் பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப் தற்போதைய பிரதமர் அப்பாசியை லண்டனுக்கு அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நவாஸ் ஷெரீப், ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் பதவியையும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

பாகிஸ்தான் சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் தலைவர் பதவி வகிக்க முடியாது என்பதால், நவாஸ் ஷெரீப் கட்சித் தலைவர் பதவி வகிக்கிற வகையில், அந்த நாட்டு பாராளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப்பின் லாகூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி குல்சூம் நவாஸ் வெற்றி பெற்றுவிட்டார்.

இந்த நிலையில் லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை வரவழைத்து நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப்பும் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை நள்ளிரவு வரை நீடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கட்சிக்கு நவாஸ் ஷெரீப் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பாரா, அவரது மனைவி குல்சூம் நவாஸ் பிரதமர் பதவியை ஏற்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தனது மகனது அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு பின்னர் நவாஸ் ஷெரீப் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “நீங்கள் மீண்டும் கட்சித்தலைவர் பொறுப்பு ஏற்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் புன்னகைத்தவாறு, “நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குல்சூம் நவாசுக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றிய கேள்விக்கு நவாஸ் ஷெரீப் பதில் அளிக்கையில், “அவருக்கு 3-வது அறுவை சிகிச்சை நடந்தது. இது பெரிய அறுவை சிகிச்சை. 24 மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டார். நேற்று (22-ந் தேதி) இரவு வீடு திரும்பியுள்ளார். மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்று கூறினார்.
Tags:    

Similar News