செய்திகள்

மெக்சிக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

Published On 2017-09-10 06:11 GMT   |   Update On 2017-09-10 06:11 GMT
மெக்சிக்கோ நாட்டில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிக்கோ நாட்டில் தென்கடலோர பகுதியில் நேற்று கடந்த வியாழக்கிழமை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 8.1 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.

நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் இந்த நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மெக்சிகோ நகர விமான நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. தலைநகரையொட்டிய பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கின.

தூங்கிக்கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து அலறியடித்தவாறு எழுந்து, வீதிகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் வந்து தஞ்சம் புகுந்தனர். குறிப்பாக, ஓக்ஸாக்கா மாகாணத்தின் பல பகுதிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின.

கடந்த 1985-ம் ஆண்டுக்கு பின்னர் மெக்சிக்கோவில் இப்படி ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது இதுவே முதல்முறை. நில நடுக்கத்தால் பெரும்பாதிப்புகள் ஏற்பட்டதால் மெக்சிகோ சிட்டி, சியாபாஸ், ஹிடால்கோ, வெராகுரூஸ், குயர்ரெரோ, டபாஸ்கோ, ஓக்சாகா, பியூப்லா, டிலாக்ஸ்கலா பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

இன்று காலை நிலவரப்படி, நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. ஓக்ஸாக்கா மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பலியாகியுள்ளனர். சியாபாஸ் மாநிலத்தில் 15 பேரும், டபாஸ்கோ மாநிலத்தில் 4 பேரும் இதர மாநிலங்களில் தலா ஓரிருவரும் பலியானதாகவும் நாடு முழுவதும் இர்மா புயலின் தாக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 90-ஐ கடந்துள்ளதாகவும் மெக்சிகோ நாட்டின் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிலநடுக்கம் பாதிப்பால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் சிதிலங்களை அகற்றும் பணிகளும், பழுதடைந்த சாலைகளை சீர்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News