செய்திகள்

வட கொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை

Published On 2017-09-07 06:41 GMT   |   Update On 2017-09-07 06:41 GMT
வட கொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்:

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.

சமீபத்தில் மேலும் ஒரு சக்திவாய்ந்த அணு குண்டினை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்தாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த பரிசோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால், வட கொரியாவோ தாங்கள் நடத்தியது அணு குண்டு பரிசோதனை அல்ல, ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைதான் என கூறுகிறது.

இந்நிலையில், அணு ஆயுத சோதனைகள் நடத்திய வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை ஐ.நா. விதிக்கத் தவறினால், அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதுபற்றி அமெரிக்க நிதித்துறை மந்திரி ஸ்டீவ் மனுசின் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்க அரசாங்கத்தால் ஒரு நிறைவேற்று உத்தரவு தயாரிக்கப்பட்டுள்ளது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக தயாராக உள்ளது.

இந்த உத்தரவானது, வடகொரியாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் எனக்கு அங்கீகாரம் அளிக்கும். இந்த விஷயத்தில் ஐ.நா.வின் நடவடிக்கையைப் பொருத்து, ஜனாதிபதி தனது முடிவை தெரிவிப்பார்” என்றார்.
Tags:    

Similar News