செய்திகள்

காபுல்: அமெரிக்க தூதரகம் அருகே வெடிகுண்டு தாக்குதல்- 5 பேர் பலி

Published On 2017-08-29 07:18 GMT   |   Update On 2017-08-29 07:18 GMT
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உச்சகட்ட பாதுகாப்பு நிறைந்த பகுதியில் அமெரிக்க தூதரகத்தின் அருகே நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபுல்:

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுல் நகரின் மையப்பகுதியில் மசவுத் சதுக்கம் பகுதியில் அமெரிக்கா உள்பட சில வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் உள்ள வங்கியில் தங்களது சம்பளப் பணத்தை எடுக்க ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இன்று காலை திரண்டிருந்தனர்.

காலை சுமார் பத்து மணியளவில் வங்கியின் வாசலில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும் 4 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அட்டூழியம் செய்துவரும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு மேலும் 4 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், உச்சகட்ட பாதுகாப்பு நிறைந்த அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள இப்பகுதியில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News