search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க தூதரகம்"

    • இரு நாடுகளும், தங்கள் நாட்டினருக்கு தனித்தனியே எச்சரிக்கை வெளியிட்டுள்ளன
    • இரு நாடுகளின் அறிவிப்புகள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

    ரஷிய-உக்ரைன் போர் பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களுக்கும், அங்கு செல்ல விரும்புபவர்களுக்கும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.

    இரு நாடுகளும், ரஷியாவில் வாழும் தங்கள் நாட்டினருக்கு தனித்தனியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.


    அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    அடுத்த 48 மணி நேரத்தில் ரஷியாவில் பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம்.

    பலர் ஒன்று கூடும் இடங்கள், இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் தாக்குதல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    எனவே, ரஷியாவில் வாழும் அமெரிக்க குடிமக்கள், பொதுவெளியில் நடமாடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.


    இதே போன்று இங்கிலாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இங்கிலாந்து மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உக்ரைன் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, 2 வருடங்கள் ஆன நிலையில், ரஷியாவில் ஆபத்து அதிகரித்துள்ளது.

    ரஷியாவில் மக்களுக்கு பாதுகாப்பு உறுதியாக இல்லை.

    எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷியாவிற்கு செல்லும் இங்கிலாந்து நாட்டினருக்கு பயண காப்பீடு ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    இரு நாடுகளின் இந்த அறிவிப்புகள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால், அமெரிக்காவும், இங்கிலாந்தும், தங்கள் எச்சரிக்கைக்கான காரணங்களை இதுவரை வெளியிடவில்லை.

    • வாகனத்தில் வந்த நபர் திடீரென தாக்குதல் நடத்தினார்
    • உயிரிழந்தவர் நேபாளத்தை சேர்ந்தவர் என அதிகாரிகள் தகவல்

    சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய நபர் திடீரென பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மீது சுடச் தொடங்கினார். பதிலுக்கு பாதுகாப்பு போலீசாரும் சுடத் தொடங்கினர்.

    இந்தச் சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலுக்கான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதி பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டு வீழ்த்தினர்.

    இதனையொட்டி தூதரகம் மூடப்பட்டது. அமெரிக்கர்கள், அமெரிக்க ஸ்டாஃப்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    உயிரிழந்தவர் நேபாளத்தை சேர்ந்தவர். அவர் தூதரக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்.
    • வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் உள்பட அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும், தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் விழிப்புடன் செயல்படவும், அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நகரம் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலம் முழுவதும் அங்கு அத்தியாவசியமற்ற மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பயணங்களை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இஸ்லாமாபாத்தின் அமைதியை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நகர துணை கமிஷனர் இர்பான் நவாஸ் மேமன் தெரிவித்துள்ளார்.

    கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்கா தனது தூதரகத்தை ஜெருசலேமில் திறந்த இரண்டு நாட்களுக்குள் கவுதமாலாவும் தனது தூதரகத்தை அந்நகரில் இன்று திறந்துள்ளது. #JimmyMorales #BenjaminNetanyahu
    ஜெருசலேம்:

    இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலமாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

    ஆனால், அவற்றை பொருட்படுத்தாமல் கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் கடந்த 14-ம் தேதி  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

    ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கிறது என அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொரால்ஸ் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார். மேலும், இஸ்ரேலின் 70 வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக மே மாதம் டெல் அவிவ் நகரில் உள்ள கவுதமாலாவின் தூதரகம் மாற்றப்பட்டு ஜெருசலேம் நகரில் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.


    இந்நிலையில், ஜெருசலேம் நகரில் கவுதமாலா தூதரகத்தை இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தூதரகத்தை திறந்து வைத்து பேசிய ஜிம்மி மொரால்ஸ், மற்ற உலக நாடுகளும் இஸ்ரேலுக்கான தங்களது தூதரகத்தை  ஜெருசலேமில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து  பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வெளிநாட்டு பயணமாக கவுதமாலா செல்லப்போவதாக அறிவித்தார்.

    1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவாகிய போது அதை அங்கீகரித்த இரண்டாவது நாடு கவுதமாலா, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அங்கு தனது தூதரகத்தை திறந்துள்ள இரண்டாவது நாடும் கவுதமாலா என்பது குறிப்பிடத்தக்கது. #JimmyMorales #BenjaminNetanyahu
    அமெரிக்கா தனது புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தூதர்களை திரும்ப பெறுவதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது. #Gaza #USEmbassyJerusalem
    ராமல்லா:

    இஸ்ரேல், பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன், கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது.

    கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

    இந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதற்கிடையே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதின் 70-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். அவர்கள், டயர்களை சாலைகளில் கொளுத்திப்போட்டனர்.



    அவர்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனர்கள் கல்வீச்சு நடத்தினர்.

    போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், காஸா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கி தனது நாட்டில் உள்ள இஸ்ரேல் தூதரை வெளியேற உத்தரவிட்டது. அதே போல் இஸ்ரேல் அரசும் தனது நாட்டில் உள்ள துருக்கி தூதரை தற்காலிகமாக வெளியேற்றியது.

    இந்நிலையில், புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள பாலஸ்தீன தூதரான குசாம் சோமால்டை திரும்ப வருமாறு பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாஸ் அறிவித்துள்ளார். #Gaza #USEmbassyJerusalem
    கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய ஆவேச தாக்குதல் 37 பேர் கொல்லப்பட்டனர். #Gaza #USEmbassyJerusalem
    ரமல்லா:

    1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.

    கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.



    இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

    இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த ஆறு வாரங்களாக காசா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 



    தங்கள் தாய்மண்ணை இஸ்ரேல் அபகரித்த நாளான 15-5-1948 என்ற தேதியை நினைவுகூரும் வகையில் வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் (நாளை) தங்களுக்கு சொந்தமான இடங்களில் குடியேறும் நோக்கத்தில் இந்த போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இவர்களின் போராட்டம் வன்முறையாக மாறும் வேளைகளில் இஸ்ரேல் நாட்டு படைகள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், இன்று கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் குவிந்து உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    காஸா எல்லைப்பகுதியில் யாரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த கூடாது என இஸ்ரேல் அரசின் சார்பில் நேற்று துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன. ஆனால், இதை பொருட்படுத்தாமல் காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று திரண்டனர்.

    கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 37 கொல்லப்பட்டதாகவும் சுமார் ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இஸ்ரேல் அரசின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாலஸ்தீனம் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாலஸ்தீன அரசின் செய்தி தொடர்பாளர் யூசுப் அல்-மஹமூத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நாட்டு மக்கள் மீது இன அழிப்பு தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேலை விவகாரத்தில் சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இவர்களுடன் சேர்ந்து கடந்த ஒருமாதத்துக்குள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர், பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×