செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ வாகனத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல்: 15 பேர் பலி

Published On 2017-08-29 00:20 GMT   |   Update On 2017-08-29 00:20 GMT
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாயினர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காந்தகார்:

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாயினர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் 6 மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து அதிபயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு படைகள்(நேட்டோ) வெளியேறும் வரை இந்த தாக்குதல்கள் தொடரும் என்று தலீபான்கள் அறிவித்துள்ளனர். மேலும், நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்காக அவர்கள் இத்தகைய பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், ஹெல்மாண்ட் மாகாணம் நவா மாவட்டத்தில் உள்ள சந்தை பகுதிக்கு அருகே நேற்று முன்தினம் ஆப்கான் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனங்கள் மக்கள் நடமாட்டம் நிறைந்த ஒரு குறுகிய சாலைப்பகுதியில் சென்றன.

அப்போது அங்கு வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஒரு பயங்கரவாதி வேகமாக ஓட்டி வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த காரை ராணுவ வீரர்களின் வாகனம் ஒன்றின் மீது மோதி வெடிக்க செய்தார்.

இதனால் காரில் இருந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. அந்த இடத்தில் கரும்புகை மண்டலம் உருவானது.

குண்டு வெடிப்பில் சிக்கிய ராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியும் செத்தார். 25-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பலியானோரில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள் எனவும், காயம் அடைந்தோரில் பெரும்பாலானோர் அப்பாவி மக்கள் எனவும் ஹெல்மாண்ட் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஓமர் ஷவாக் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதுபற்றிய தகவலை தலீபான் பயங்கரவாதிகள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்து உறுதி செய்தனர்.

2 நாட்களுக்கு முன்புதான் ஹெல்மாண்ட் மாகாணத்தின் லஷ்கார் கா என்னும் இடத்தில் போலீஸ் குடியிருப்பு பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 5 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில் அதே ஹெல்மாண்ட் மாகாணத்தில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் உறுதியாக உள்ளது என்று அறிவித்த நிலையில் இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News