செய்திகள்

தாக்குதல் திட்டத்தை கைவிட்டதால் வடகொரியா அதிபருக்கு டிரம்ப் பாராட்டு

Published On 2017-08-17 08:04 GMT   |   Update On 2017-08-17 08:04 GMT
குவாம் தீவை தாக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த 4 ஏவுகணைகளையும் வாபஸ் பெறும்படி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதற்கு டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

வடகொரியாவும் அதையொட்டி உள்ள தென்கொரியாவும் பகை நாடுகளாக உள்ளன.

தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வந்தது.

இதனால் வடகொரியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.

அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவு வட கொரியாவுக்கு அருகே ஜப்பானையொட்டி அமைந்துள்ளது. இந்த தீவை தாக்க போவதாக வடகொரியா அறிவித்தது.

இதற்காக 4 ஏவுகணைகள் தயாராக வைக்கும்படி அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். அதன் மூலம் குவாம் தீவில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் ஆத்திரம் அடைந்தார்.

வடகொரியா தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவின் கடும் சீற்றத்தையும், உலகம் இதுவரை கண்டிராத தாக்குதலையும் சந்திக்க வேண்டியது வரும் என்று டிரம்ப் கூறினார்.

இதனால் எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படலாம் என்ற நிலை உருவானது.


இதற்கிடையே வடகொரியா சற்று பணிந்துள்ளது. குவாம் தீவை தாக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த 4 ஏவுகணைகளையும் வாபஸ் பெறும்படி அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். தாக்குதலை தள்ளி வைத்திருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

இது சம்பந்தமாக டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், வடகொரியா அதிபர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருக்கிறார்.

இது ஒரு நியாயமான முடிவு. இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். இதன் மூலம் பேரழிவும், ஏற்று கொள்ள முடியாத செயலும் நிறுத்தப்பட்டு இருப்பதாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News