செய்திகள்

இலங்கை: ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் படுகொலை - ராஜபக்சே மனைவியிடம் போலீசார் 4 மணிநேர விசாரணை

Published On 2017-08-15 13:33 GMT   |   Update On 2017-08-15 13:33 GMT
இலங்கையை சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவி ஷிராந்தியிடம் போலீசார் இன்று 4 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
கொழும்பு:

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோசிதாவின், நெருங்கிய நண்பராக இருந்தவர் வாசிம் தாஜுதீன். ரக்பி விளையாட்டு வீரரான இவர், கடந்த 17-5-2012 அன்று தனது காரில் பிணமாக கிடந்தார்.

எரிந்த நிலையில் கிடந்த காரையும், வாசிம் தாஜுதீன் பிணத்தையும் கைப்பற்றிய போலீசார், இதை விபத்து எனக்கூறி வழக்கை முடித்தனர்.

பின்னர், வசீம் தாஜுதீன் விபத்தில் இறக்கவில்லை என்றும் அது ஒரு கொலை என்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், தாஜுதீனின் உடலைத் தோண்டியெடுத்து பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.


இந்த சம்பவம் தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்று கிடைத்திருப்பதாகவும், எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி கடந்த மாதம் போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். உயிரிழந்த தாஜுதீன் முதலில் கடத்தி செல்லப்பட்டதாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததாகவும் கூறினர்.

யோசிதாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜபக்சேவின் பாதுகாவலர்களே தாஜுதீனை கடத்திச் சென்று கொலை செய்ததாக கூறப்பட்டது.



இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தெகிவளை முஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தாஜுதீனின் புதைகுழி சட்டமருத்துவ அதிகாரி, நீதிபதி ஆகியோரின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டின் எச்சங்கள், சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டன. நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

ராஜபக்சேவின் குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கம் பாராட்டிவந்த தாஜூதீன் மரணத்துக்கு காரணமான விபத்துக்குள்ளாக்கிய வாகனம் அந்நாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி நடத்திவரும் அறக்கட்டளைக்கு சொந்தமானது என முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தாஜுதீன் படுகொலை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவி ஷிராந்தியிடம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கு சற்று கால அவகாசம் கேட்டிருந்த ஷிராந்தி ராகபக்சே இன்று போலீசார் முன்னிலையில் ஆஜரானார், அவரிடம் சுமார் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tags:    

Similar News